இந்தியாவை உலுக்கிய படுகொலைகள் மூன்று.
முதலில் மகாத்மா காந்தி : இந்தியாவை விட்டு
பிரிந்து போன பாகிஸ்தான் கேட்டதை எல்லாம் கொடுத்து தத்தம் பண்ணி கொண்டிருந்தார்
என்று கோட்சே அவரை சுட்டு கொன்று விட்டான்.
வாங்குவதை விட மனதார கொடுப்பதில் சந்தோசம் அதிகம் என்பதை கோட்சே மற்றும்
குழுவினர் ஏனோ புரிந்து கொள்ளவில்லை. இன்று
நாம் பாகிஸ்தானை விட எல்லா விதத்திலும் எவ்வளவோ உயர்ந்து நிற்கிறோமே! சுட்டவன்,
சுடப்பட்டவர் இருவரும் ஒரே இடத்தில் இருந்ததால் காரண காரியங்களை விசாரிப்பது
எளிதாக இருந்தது.
இரண்டாவது உலுக்கல் இந்திரா காந்தி : அவரது
படுகொலைக்கு ஆபரேஷன் ப்ளு ஸ்டார் முதன்மையான காரணமாக வைக்கப்பட்டது. நேராக நூல்
பிடித்த மாதிரி குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, விசாரணைகள் நடந்தன.
மூன்றாவது உலுக்கல் ராஜீவ் காந்தி: இன்றளவும்
சர்ச்சைக்குள்ளான படுகொலை. உன்-குழல்
(சாரி..யூ-ட்யூப்) தளத்திருக்கு போய் “ராஜீவ் காந்தி” என்று தேடினால் பல்வேறு பார்வைகள்,
விளக்கங்கள், விவாதங்கள் கிடைக்கப்பெறும்.
மனைவி சோனியா தான் காரணம் என்பதிலிருந்து ராஜீவ் போதை பழக்கத்திற்கு அடிமை
ஆனதால் மதிகெட்டு தானே(!) வெடிகுண்டு வைத்துக்கொண்டு இறந்து போனார் என்பது
வரையிலும் சதியாலோசனை கருத்துக்கள் (conspiracy theories) இருக்கிறன.
மகாத்மா இறந்த போது நான் (நம்மில் பலரும் உள்பட)
பிறக்கவில்லை. எல்லாம் புத்தகத்தில் படித்ததும், கேள்விப்பட்டதும் தான். இந்திரா இறந்த போது எனக்கு வயது 19. அரசியலில்
அதிக நாட்டம் இல்லாததாலும், இன்று போல அன்று ஊடகங்களின் ஆதிக்கம் இல்லாததாலும்
அதிக விவரங்கள் தெரியவில்லை. இறந்த பிறகு
டெல்லியில் பெரிய கலவரம் வெடித்ததாக (டெல்லியில் இருந்த) என் பெரியம்மா
கூறினார்கள். தூர்தர்ஷன்-இல் இந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது
ஒளிபரப்பபட்டபோது போது என் தாத்தா அழுதார். மனதில் நின்றது அவ்வளவே. ராஜீவ் இறந்த
போது எனக்கு வயது 26. டெல்லியில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அரசு பணியில்
இருந்தேன். 22 மே காலை என் வீட்டுக்காரர்
(house-owner) ராஜீவ் இறந்த தகவலை அதிர்ச்சியோடு கூறினார். மேலும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்திரா
இறந்த போது சீக்கியர்கள் மீது வன்முறை நடந்தது போல, இப்போது மெட்ராஸீஸ்
(தென்னிந்தியர்கள்) மீது வன்முறை நடக்க இருப்பதாகவும் பயமுறுத்தினார். நல்லவேளை, அப்போது பி.எம்-ஆகா இருந்த
சந்திரசேகர், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் வன்முறைக்கு வந்தவர்களை குண்டுகட்டாக கட்டி
சிறையில் அடைத்ததாக தெரிந்து கொண்டேன். அப்போது நான் வேலை பார்த்த இடம் மத்திய அமைச்சர்
அலுவலகம் ஆனதால் Intelligence Bureau தரும் இது போன்ற தகவல்களை படிக்கும் வாய்ப்பு
கிடைத்தது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு,
அன்றைய தேர்தல் ஆணையர் சேஷன்-முதல் பலஸ்தீனிய அதிபர் யாசர் அராபத் வரை “எனக்கு
அப்பவே தெரியும், இது மாதிரி நடக்கும்னு” என்று அறிக்கை விட்டுக்
கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு, புள்ளகுட்டி, பால் பவுடர், ஸ்கூல் அட்மிஷன்
என்று லௌகீக வாழ்கை பிசி ஆகி விட்டதால் ரா.கா. படுகொலை ஒரு குட்டி செய்தியாக
மட்டுமே மூளையின் ஒரு செல்லில் அடங்கிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் புத்தக
கண்காட்சியில் “ராஜீவ் கொலை வழக்கு-மர்மம விலகும் நேரம்” என்ற புத்தகத்தை வாங்க
நேர்ந்தது. ஆசிரியர் கே.ரகோத்தமன், இந்த
வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி. ஒரு
த்ரில்லர் நாவல் போல விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார். இதோ அந்த புத்தகத்தின் சாராம்சம்...
படுகொலைக்கு காரணம் இந்திய அளவில் உல்பா அல்லது
காஷ்மீர் தீவிரவாத இயக்கத்திலிருந்து, CIA, மொசாட் போன்ற இயக்கங்களை
சந்தேகப்பட்டார்கள். அதே இடத்தில் அன்று
தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம் நடக்கவிருந்து திடீரென்று ரத்தானதால், தி.மு.க.
மீதும் சந்தேகம் வந்ததே தவிர, முதலில் விடுதலை புலிகள் மீது எள்ளளவும் சந்தேகமே வரவில்லை. சொல்லப்போனால் ரா (RAW) உயர் அதிகாரிகள்
புலிகள் மீது சந்தேகமே வேண்டாம் என்று உறுதியாக அடித்துச் சொன்னார்கள். இதற்க்கு காரணம் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில்
ஒருவரான கிட்டு ரா-வின் உளவாளி என்று நம்பியதுதான் வேடிக்கை.
சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த கேமரா-வில்
இருந்த புகைப்படங்கள் முதலில் ஹிந்து பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று அதன்
பின்னரே சிபிஐ-கைவசம் ஒப்படைக்கப் பட்டது, நம் அரசு அதிகாரிகளின் விசுவாசத்தை
(யாரிடம் என்பது தான் கேள்வி) பாராட்டியே ஆகவேண்டும். அந்த கேமரா-வின்
சொந்தக்காரர் ஹரிபாபு வீட்டில் விசாரணை துவங்கி (அங்கு தான் 65 ரூபாய்க்கு வாங்கிய
சந்தன மாலையின் ரசீதும் கைப்பற்றப் பட்டது) சுபா சுந்தரம், பாக்கியநாதன், அவன்
தாய் பத்மா, சகோதரி நளினி, முருகன், ஆதிரை, சின்ன சாந்தன் என்று ஒவ்வொருவராக கைது
செய்யப்பட்டு விசாரணையில் முன்னேற்றம் கண்டது சிபிஐ.
முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் இதோ
(ப்ரக்கெட்டில் கொடுக்கப்பட்டு இருப்பது அவர்களின் மற்ற பெயர்கள்):
சிவராசன் – (பாக்கிய சந்திரன், ரகுவரன், சிவராஜா
மாஸ்டர், கண்ணாடி அண்ணா)- இலங்கைத்தமிழ் வாசம் வீசாமல் நம் தமிழ்நாட்டு தமிழ்
பேசக்கூடியவர். இந்த படுகொலையின்
சூத்திரதாரி. இவர் பொட்டு அம்மான் என்னும்
விடுதலை புலியின் கீழ் வேலை பார்த்தவர். கோனனகுண்டே (கர்நாடகாவில் உள்ளது)
வீட்டில் உடனிருந்த மற்ற புலிகள் சைனைட் தின்று உயிர் விட்ட பிறகு, இவரும் சைனைட்
தின்று, போதாகுறைக்கு நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் இறந்தவர்.
முருகன் - (ஸ்ரீஹரன், இந்து மாஸ்டர், தாஸ்) – இந்தியாவில்
வி.புலிகளின் உளவு துறையை நிறுவ வந்தவர். இன்று “அதிதி தேவோ பவ” என்று
சிறையில் விருந்தினராக இருக்கிறார்.
தணு - (காயத்ரி) ராஜீவ்-க்கு கடைசியாக மாலையிட்ட
மங்கை – மனித வெடிகுண்டு.
சுபா - தணுவிருக்கு stand-by-ஆகா இருந்தவள்.
பின்னால் குப்பி கடித்து உயிர் விட்டவள்.
நளினி – தமிழ்நாட்டுப் பெண். முருகனை காதலித்து, அதன் காரணமாக “அவரை ஒன்றும்
செய்யாதீர்கள், எல்லா உண்மையையும் நான் சொல்லுகிறேன்” என்று புலிகளின் திட்டம்
முழுவதும் சிபிஐ-க்கு சொன்னவள். நளினி-முருகன் காதல் மட்டுமே சிபிஐ-க்கு கடைசி வரை
கைவிளக்காக விசாரணையில் துணை இருந்திருக்கிறது.
சின்ன சாந்தன் – (சுதேந்திர ராஜா – [சுதந்திர ராஜா அல்ல],
மகேந்திரன், ராஜு) – இதற்க்கு முன் தமிழகத்தில் நடந்த EPRLF தலைவர் பத்மநாபா
கொலையை நடத்தியவர். ரா.கா. கொலை
வழக்கிலும் முக்கிய பங்குண்டு.
ஹரிபாபு – சம்பவத்தை படம் பிடித்து உயிரை விட்டவன். இவனிடம் இருந்து தான் விசாரணை துப்பு
துவங்கியது.
ஆதிரை – (சோனியா) இவள் தான் திட்டத்தை செயல் படுத்த
முதலாக இலங்கையிலிருந்து வந்தவள். ராஜிவை
டெல்லி-யில் கொல்லும் திட்டத்தில் மனித வெடிகுண்டாக செயல் பட இருந்தவள்.
திட்டம் மாறியதால் தப்பித்தாள். அப்போது அவளுக்கு வயது 17!
அறிவு – (பேரறிவாளன்) – வெடிகுண்டை தயார் செய்ததில்
பெரும் பங்குண்டு.
இந்த புத்தகத்திலிருந்து சுவையான சில பகுதிகள் இதோ.
.... நான் நேரடியாக விசாரணைக்கு முதல் முறை
அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது ஒரு சம்பவம் நடந்தது. ஹரி பாபுவின் அம்மா, என்னிடம் டீ
சாப்பிடறீங்களா என்று கேட்டார். கேட்டு விட்டு டீ போட உள்ளே போயிருந்தால்
பிரச்சனையில்லை.
ஒரு பையனை அழைத்து ‘சாருக்கு டீ வாங்கிட்டு வா”
என்று சொன்னார். எனக்கு தர்ம
சங்கடம்தான். அவர்கள் இருந்த ஏழைமை நிலையை
பார்க்க, ஒரு டீ வாங்கி கொடுப்பது கூட அவர்களுக்குச் சுமைதான். எனவே நானே காசு கொடுக்கலாம் என்று பக்கெட்டில்
கைவிட்ட சமயம், சட்டென்று அந்தப் பெண்மணி தன் ரவிக்கைக்குள் கைவிட்டு காசை எடுத்து
விட்டார்.
ஒரு கணம் அதிர்ந்து போனேன். அது ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ அல்ல. கத்தையாக நூறு ருபாய் நோட்டுக்கள்!
போலீஸ் விசாரணைகளின் பல்வேறு வடிவங்கள் குறித்து
சாங்கோபாங்கமாக விவரித்து, ஆனால் நளினிக்கு அடி, உதைகள் ஏதும் இருக்காது என்று
உத்தரவாதம் அளித்தேன்.
அந்த இடத்தில் நளினி வாய் திறந்தார்.
“அவரை அடிச்சிங்களா? அடிக்காதீங்க. அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்க!”
“அவர்?”
“தாஸ்... என் காதலர்”.
தாஸ் தான் முருகன் என்கிற விவரம், முருகன் மூலமாகவே
சிவராசன் நளினிக்கு அறிமுகமான விவரம் அப்போது தெரிய வந்தன.
ராஜீவ் காந்தி தங்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்றே
அவர் பேசிய தருணங்களும் உண்டு.
விடுதலைப் புலிகளின் அகராதியில் துரோகம் என்பதற்கு ஒரே
தண்டனைதான். இது உலகுக்கே தெரியும். அந்த வகையில் ராஜீவ் காந்தி உயிருக்கு
புலிகளால் ஆபத்து உண்டு என்பது இந்திய உளவு அமைப்புகளுக்கு மட்டும் தெரியாத விஷயம்
என்பது பிறகு தெரியவந்தது!
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால்,
விடுதலைப் புலி உறுப்பினரான சின்ன சாந்தன், பத்மநாபாவைத் தீர்த்துக் கட்டுவதற்காக
மனப்பூர்வமாகத் தன்னை ஒரு ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆதரவாளனாக இனம் காட்டிக்கொண்டு
சூளைமேடு ஈ.பி.ஆர்.எல்.எஃப் அலுவலகத்தில் இருந்தவர்களுடன் பேசியும் பழகியும்
வந்தது.
தங்கள் திட்டமிட்ட பணி தடையில்லாமல் நடைபெற,
தங்களுடைய ஜென்ம விரோதிகளின் அடையாளத்தைக் கூடத் தாற்காலிகமாக ஏந்தலாம் என்பது
அவர்களுடைய கருத்தாக இருந்திருக்கிறது!
ராஜீவ் மெலிதாகப் புன்னைகை செய்தார். Include Aunty’s constituency என்று எழுதிக் கையெழுத்திட்டுத் திருப்பிக்
கொடுத்தார்.
அது மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர்.
சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மாலை போடுகிரவர்களின்
பட்டியலை எழுதி வைத்திருந்த லட்சணத்தைப் பின்னால் நாங்கள் பார்க்க நேர்ந்தபோது
அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றோம். ஒரு
கசங்கிப் போன துண்டு காகிதத்தில், ஒரு வரிசையில்லாமல், சீரியல் நம்பர் இல்லாமல்,
மாலை போடுகிறவர் யார் என்ன என்கிற விவரம் இல்லாமல் – ஏதோ சொல்லிவிட்டார்களே
என்பதனால் கீழே கிடந்த குப்பைக் காகிதத்தில் நாலு பெயர்களை கிறுக்கி
வைத்திருந்தார்!
ஒரு விஷயம் சொன்னால் வியந்து போவீர்கள். விடுதலைப் புலிகளின் திட்டப்படி, மனித
வெடிகுண்டாக ஸ்ரீபெரும்புதூர் சென்ற தணு என்கிற அந்த ஒரு பெண்ணைத் தவிர, அவர்கள்
குழுவில் வேறு யாரும் இறந்திருக்கும் வாய்ப்பு கிடையாது. குறிப்பாக ஹரி பாபு.
..........
புலிகளின் திட்டப்படி அனைவரும் தப்பித்து அந்தப் புகைப்பட
ஆதாரம் கூட கிடைக்காமல் இன்றுவரை சிபிஐ அலைந்துகொண்டிருக்கும்.
ராஜீவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட்
மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை. எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள்
இருந்தார்கள். எந்த வித அபாயகரமான கட்டத்திலும் துணிந்து பாய்ந்து சென்று போரிட
வல்லவர்கள். புலிகளிடம் சயனைட் இருக்கிறது
என்பது நன்கு தெரிந்த பிறகு, வீட்டை முற்றுகையிட்டு, தக்க தருணத்துக்காக
காத்திருப்பது என்பது எப்பேர்பட்ட அபத்தம்!
பணி நேர்த்தி என்னவென்று என்னுடைய சக
அதிகாரிகளைப் பார்த்து உலகம் பயிலலாம்.
புலனாய்வில் ஈடுபட்ட கடைசி கான்ஸ்டபிள் வரை இந்த அர்ப்பணிப்பையும்
நேர்மையையும் கொண்டிருந்ததை என்னால் காண முடிந்தது.
அதிகார மட்டத்தில் எத்தனை கசப்புகளை எதிர்கொள்ள
நேர்ந்தாலும் இந்த ஓரம்சம் எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது என்பதை மறுக்கவே
முடியாது!