Friday, 7 September 2012

அத்தியாயம் 1 - புறாவோடு பறந்த உயிர்....(தொடர்ச்சி..)

மகனுக்கு இன்று அதிகமாகவே பாடம் எடுத்து விட்டோம் என்று நினைத்தாரோ தெரியவில்லை, தன் முகத்தை துடைத்துக்கொண்டு இயல்பான நிலைக்கு வர முயற்சி செய்தார் மிர்சா ஷேக். பாபரின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளியைக் கண்டது அவருக்கு மன நிம்மதியைத் தந்தது. 

புழுதி படிந்த அந்த மண் கோட்டையை மீண்டும் ஒரு சுற்று பார்வையிட்டான் பாபர். போர்வீரர்கள் காவல் காப்பதற்காக அந்தக் கோட்டை சுவற்றின் ஒவ்வொரு ஓரத்திலும் திறந்த கொத்தளம் (battlement) அமைக்கப்பட்டு இருந்தது.  காவலாளி நிற்க வேண்டிய அந்த இடம் மட்டும் கோட்டை சுவற்றுக்கு வெளியே துருத்திக் கொண்டிருந்தது. கோட்டை மதிலில் அவன் அமர்ந்து இருந்த பகுதியின் கொத்ததளத்தில் காவலாளி இல்லை, மாறாக ஒரு கூம்பு வடிவத்தில் ஒரு பெரிய புறாக்கூண்டு இருந்தது.

அந்த கொத்தளத்திலிருந்து கீழே நோக்கினால் ஆழத்தில் அகழி.  மழைக்காலத்தில் தண்ணீர் இருக்கும்.  இப்பொழுது முதுவேனிற் காலம் என்பதால் வறண்ட பள்ளமாக, வெறும் பாழாக இருந்தது. மண் கோட்டையின் இறுக்கத்தையும் மீறி சில செடி வகைகள் கோட்டை சுவர் இடுக்குகளில் வளர்ந்து இருந்தன. பகலில் சாம்பல் நிறத்தில் இருக்கும் கோட்டை, அந்திப் பொழுதில், மறையும் சூரியனின் கதிரொளி பட்டு இளஞ்சிவப்பு நிறமாகத் தெரிந்தது.  பகலில் நீல நிறமாகத் தெரியும் ஜாக்ஸார்ட்ஸ் (Jaxartes) நதி கூட அந்தச் சூரியனின் ஒளி பட்டு கருஞ்ச்சிவப்பு நதியாக மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. 

சற்றே சோகம் கலந்த நகைச்சுவை உணர்வோடு சொன்னார், “குறுநில மன்னனாக இருப்பதில் சில சௌகரியங்கள் உண்டு பாபர்.  வாழ்க்கையின் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவிக்கலாம் பார்!.”  தன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த தோல் பையிலிருந்து குளிர்ந்த தண்ணீரை ஒரு மிடறு விழுங்கினார் மிர்சா ஷேக்.  சூரியனும் மறையத் தொடங்க ஆரம்ப்பித்தது; இன்னும் சில நிமிடங்களில் தொழுகைக்குண்டான நேரம் வந்துவிடும்.  தனது வெல்வெட் பாதுகைகள் “பட் பட்” என்று அடித்துக் கொள்ள அந்த கொத்தளத்தில் உள்ள புறக்கூண்டினை நோக்கி வேகமாக நடந்தார்.  தனது இரண்டு கைகளையும் அகல விரித்து கூ... என்று ஒரு வினோதமான ஒலியை எழுப்பினார்.  அதுவரை எங்கிருந்ததோ தெரியவில்லை, நான்கைந்து வெண்புறாக்கள் வட்டமடித்து அந்தப் புறக்கூண்டுக்கு வந்தன.  மிர்சா ஷேக்கின் செல்லப் புறா மட்டும் அவர் கையில் வந்து உரிமையோடு அமர்ந்தது.  ஒரு காதலனைப்போல அந்த கொழுத்த வெண்புறவின் கழுத்தை அன்போடு தடவிக்கொடுத்தார் மிர்சா ஷேக்.

ஹும்ம்... அரசரின் கைகளில் இருக்க வேண்டியவையா இவை?  என்னைப் பொறுத்தவரையில் என் சமையல்காரன் கையில் அல்லவா இருக்க வேண்டியவை இவை.  என்று ஒரு கணம் அந்தப்புறாக்களை பற்றி நினைத்துவிட்டு, தைமூரின் சிந்தனையில் வயப்பட்டான்.  இன்று என் நிலையில் தைமூர் இருந்தால் என்ன செய்வார்?  ஒரு நாட்டை வெற்றி கொண்டு அதன் அரசன் நம் காலில் விழும் உணர்ச்சி எப்படி இருக்கும்? 

நான் அரசனாக பொறுப்பு எடுத்தால் முதலில் அந்த கம்பர் அலியை (Qambar Ali) பதவி நீக்கம் செய்வேன்... இல்லை இல்லை அவனுக்கு நேராக மேல் லோகத்தில் பதவி கொடுப்பேன்!  அவன் சிவப்பேறிய கண்களும், சோழி சோழியாய் மஞ்சள் பற்களும், அரசனின் அரசியல் ஆலோசகர் என்ற பதவிக்கே ஒரு இழுக்கு!! தைமூராக இருந்திருந்தால் ஒரு கணம் கூட யோசிக்காமல், நாற்றமடிக்கும் அந்த அழுக்கு கழுதையின் தலையை சீவி இருப்பார்.  என் நேரமும் வரும்.. அப்போது....

“ஆஅஹ்ஹ்...” தந்தையின் குரல் விநோதமாகக் கேட்டது.  என்னவென்று பார்பதர்க்குள் ஒரு மண்புழுதிப் படலம் அவன் கண்ணை மறைத்தது.  அதையும் மீறிப் பார்க்க முயன்ற போது அந்தப் புழுதி கண்ணில் சென்று உறுத்தவே, அனிச்ச செயலாக பாபர் தன் இரு கைகளாலும் கண்களை பொத்திக்கொண்டான்.

“இளவரசே... நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் - உங்களுக்கு ஒன்றும் இல்லை” என்று கூறி ஒரு இரும்புக்கரம் அவனை பின்னால் இருந்து அணைத்தது. பாபர் தன்னிலைக்கு வர சில வினாடிகள் ஆயின.  பின்னால் தன்னை அணைத்தது படை தளபதியும், அரசரின் தலைமை மெயிக்காவலனும் ஆகிய வசீர் கான் (Wazir Khan)  என்பது புரிந்தது.  ஆனால் என்ன நடந்தது என்று புரிய சில வினாடிகள் ஆயிற்று.

இந்தப்பகுதியில் அடிக்கடி வரும் நில நடுக்கமா? இல்லையே.... நில நடுக்கம் இப்படி இராதே... என்று யோசித்துக்கொண்டு கண்களை மெல்லத் திறந்தான் பாபர்.  புழுதி மெல்லப் படிய படிய பார்வையும் சற்று தெளிய, நிலைமை விளங்கிற்று.  அந்தப் புறக்கூண்டு அங்கே இல்லை; மாறாக புறாக்கள் பனித்துளிகளாக மேலே பறந்து கொண்டிருந்தன.. கொத்தளமும் இல்லை. ஏதோ ஒரு ராட்சஸ வாய் அப்பளத்தை கடிப்பது போல அந்தக் கோட்டைச் சுவரை கடித்தது இருந்தது.  அப்பா??...

அப்பாவைப்பற்றி நினைத்த உடனேயே வயிற்றிலிருந்து அமிலப்பந்து ஒன்று புறப்பட்டு அவன் மார்பை அழுத்தமாக அடைத்தது.  மெதுவாகச் சென்று அந்த உடைந்த சுவற்றின் வழியே கீழே பார்த்தான்.  அப்பா தெரியவில்லை.  அவரது மகுடம் மட்டும் கோட்டை சுவற்றில் வளர்ந்திருந்த ஒரு செடியில் மாட்டி தொங்கி ஆடிக் கொண்டிருந்தது.  மண் கோட்டைக்கொத்தளம் வெயில் தாங்காமல் காய்ந்து புரையோடி போய் இருந்திருக்கிறது.  புறக்கூண்டின் கனமும், அரசரின் கனமும் தாங்க முடியாமல் அப்படியே உடைந்து அகழியில் விழுந்து விட்டது.  இதுதான் நடந்து இருக்கிறது.

இதற்குள் நாலைந்து வீரர்கள் தீப்பந்தங்களுடன் அகழியில் இறங்கி இடிந்து விழுந்தவற்றை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  முதல் தென்பட்டது அரசரின் செல்லப்புறா.  இடிபாட்டில் இறந்து போன அதை எடுத்து ஒரு வீரன் அந்தண்டை போட்டவுடன் ஒரு பருந்து வந்து அதை கொத்திச் சென்று பறந்தது.  அரசரை இன்னும் காணவில்லை.

இடிந்து விழுந்த இரண்டு மூன்று பெரிய துண்டங்களை வீரர்கள் அகற்றியவுடன் அரசரின் நீல நிற அங்கி தெரிந்தது.  அந்ததீப்பந்த வெளிச்சத்தில் அந்த நீல நிற அங்கி ரத்தக்கறையோடு திட்டு திட்டாக கரும்சிவப்பு நிறத்தில் தெரிந்தது.  ஒரு வீரன் அரசரின் உடலை என்ன செய்ய என்பது போல வசீர் கானை பார்த்தான்.  அரண்மனைக்குள் எடுத்துச் செல் என்று சைகையால் உத்தரவிட்டு, பாபரை அணைத்து நேராக நிறுத்தி... “பெர்கனாவின் அரசர் பாபர் மிர்சா வாழ்க.. இந்த அடிமையின் உயிர் உங்களுக்கு” என்று மண்டியிட்டு தலை வணங்கினார் வசீர் கான்.

நடப்பவை கனவா, நனவா என்று புரிய பாபருக்கு சில நிமிடங்கள் பிடித்தது.  தன் கைகளால் முகத்தை அழுத்தமாக மூடிக்கொண்டு நடந்தவற்றை ஜீரணித்துக்கொள்ள முயன்றான்.  சில நிமிடங்கள் முன் வரை தன்னுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா இப்போது உயிரோடில்லை என்ற உண்மை அவனுள் இறங்கத் தொடங்கியது.  அதன் சோகம் முதலில் விசும்பலில் ஆரம்பித்து, அழுகையில்அவனது உடல் குலுங்கியது.  வசீர் கான் பாபரை தடுக்கவில்லை. 

தன் தந்தை கடைசியாக சொன்ன செய்தி மட்டும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது... “தைமூரின் ரத்தம் உன் ரத்தம்..” மனதளவில் ஒலித்த அந்த செய்தி..முதலில் வாயசைவாகச் சொன்னான். “தைமூரின் ரத்தம், என் ரத்தம்...அடுத்த முறை சற்று உரக்கச் சொன்னான்..”தைமூரின் ரத்தம் என் ரத்தம்..” ..”தைமூரின் ரத்தம் என் ரத்தம்..” இப்போது வசீர் கானுக்கும் கேட்கும்படி வீரத்தோடு சொன்னான்... ..”தைமூரின் ரத்தம் என் ரத்தம்..”.. வசீர் கான் அவனை துணுக்குற பார்க்க பாபரின் அழுகை, சோகம் எல்லாம் நொடியில் பறந்து, ஒரு பெரிய மனிதர்களுக்குரிய பொறுப்புணர்வு வந்தது போல உணர்ந்தான். கண்களில் தேங்கிய கண்ணீரை தன் புழுதி படிந்த உடையால் துடைத்துக்கொண்டு தைமூரின் பரம்பரையை உயர்த்தி நிறுத்துவது போல கம்பீரமாக நின்றான் பாபர். 
 
வசீர் கானை நோக்கி சொன்னான்..”என் தந்தையார், பெர்கானா அரசர் மேன்மை தங்கிய உமர் ஷேக் மிர்சா இறைவனடி சேர்ந்து விட்டார்.  இச்செய்தியை என் அம்மாவிற்கு தெரியப்படுத்தும் முதல் ஆள் நானாகத் தான் இருக்க வேண்டும்” என்று தன் அம்மா இருக்கும் அந்தப்புரம் நோக்கி புயலென ஓடினான் பாபர்.
அவன் வேகத்தையும், விவேகத்தையும் பார்த்து வியந்து சிலையாக நின்றார் வசீர் கான்.

சரித்திரக்குறிப்பு:  உமர் மிர்சா ஷேக் தைமூரின் ஐந்தாவது ஆண் வாரிசு மற்றும் தாய் வழியில் கெங்கீஸ் கானின் பதிமூன்றாவது வாரிசு.

Wednesday, 5 September 2012

பகுதி 1 - தைமூரின் ரத்தம்!


அத்தியாயம் 1 - புறாவோடு பறந்த உயிர்....

கி.பி.1494 - மத்திய ஆசியா - பெர்கானா அமீரகம் (Emirate of Ferghana) - முதுவேனிர்காலம்...

தைமூர் (Taimur or Timur) என்ற சொல்லுக்கு இரும்பு எனப் பொருள்படும். அந்த இரும்பை போல உடலும் மனமும் படைத்த தைமூர் போருக்கு போனால் அவருடைய போர்க்குதிரைகள் உதிரத்தை வியர்வையாக சிந்தும் என்பது வரலற்று உண்மை. அன்று அறியப்பட்ட உலகத்தில் பாதியை வென்று தன் பாயும்புலிக்கொடியை நாட்டினார் தைமூர்.  சிறு வயதில் ஒரு போரில் காலில் ஏற்ப்பட்ட காயத்தால், விந்தி விந்தி நடக்க வேண்டி இருந்தாலும், டெல்லியிலிருந்து மேற்கு ஆசியா வரையிலும், பாரசீகதிலிருந்து வோல்கா நதி வரையில் அவரது சாம்ராஜ்யம் பரவி இருந்தது. தைமூர், அடுத்து சீன தேசத்தை கைபற்ற நினைத்த போது, ஆண்டவன் அவரை தன்னோடு இருக்குமாறு பணித்துவிட்டார்.

பெர்கானா அரசர், மிர்சா உமர் ஷேக் (Mirza Umer Sheikh) தனது 12 வயது மகன் பாபருக்கு தினமும் சொல்லும் கதையை மீண்டும் கூறினார்.  இவன் தினமும் கேட்க்கும் கதை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத கதை. அந்தக் கதையை ஒரு கவிதை நயத்தோடு சொல்வார்.  ஒவ்வொரு முறையும் அந்தக் கதையின் அழகில், அவர்சொல்லும் நயத்தில், அந்த ஏற்ற இரக்கத்தில் உருகிப்போவான் பாபர். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தகவல்; ஒரு புதிய பரிமாணம்; ஒரு புதிய நயம் இருக்கும்.  ஆனால் அதன் உச்சக்கட்டம் மட்டும் என்றும் மாறியதே இல்லை.  அவர் வார்தைக்களின் கம்பீரம் குறைந்ததே இல்லை! 

உன் கேள்வி எனக்கு புரிகிறது பாபர்.  ஒரு தனி மனிதனால் எப்படி இவ்வாறு ஒரு பேரரசை நிறுவ முடிந்தது?

தைமூர் வீரம், விவேகம் நிறைந்தவர் மட்டுமல்ல. அவர் ஒரு மாபெரும் தலைவர்.  என் பாட்டனார் கூறியுள்ளார், தைமூரின் கண்கள் ஒளி நிறைந்தவை என்று.  அவரது பார்வை பார்ப்பவரின் உள்ளத்தை, ஆன்மாவை ஊடுருவும்! அவரது வார்த்தைகள் ஒரு கோழைக்கு கூட வீரம் ஏற்படுத்தும்! அவரின் ஆளுமைக்கு உட்பட்டவன் யாரானாலும் அவருடன் இறுதிவரை அவருக்காக போராடத் தயங்கியதில்லை.

ஆஹ்.... சில மூடர்கள் சொல்வது போல தைமூர் ஒரு காடுமிரண்டியும் அல்ல!  நிச்சயமாக அல்ல என்று தலையாட்டினர்.. அவரின் கருத்தை ஆமோதிப்பது போல அவர் மகுடத்தில் இருந்த குஞ்சங்களும் இல்லை என்பது போல பக்கவாட்டில் ஆடின.  அவர் ஒரு கலாசாரம் மிக்கவர்.  அவரது தலை நகரான சமர்கண்டை (Samarkand) பார்... இன்றும் அது எத்தனை அழகான நகரமாக இருக்கிறது... அவர் காலத்தில் அது கலை எழில் கொஞ்சும்நகரமாக இருந்தது.. பல மேதைகள் வந்து படித்த...போதித்த நகரமாக இருந்தது....

அரசனுக்கு வாழ்வதற்கு சில விதி முறைகள் உண்டு பாபர்... சாதாரண மனிதனுக்கு இல்லாத விதிகள்.. சாதா மனிதனின் தவறுகள் அவனை மற்றும் அவனை சார்ந்தவர்களை மட்டும் தான் பாதிக்கும்.  அரசனின் தவறுகள் ஒரு நாட்டையே பாதிக்கும், ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும்.  தைமூர் ஒருபொழுதும் அரசனுக்குரிய அந்த விதிகளை மீறியதில்லை.  வெற்றிக்கும் தனக்கும் இடையில் வந்த எதற்கும் அவர் கருணை காட்டியதில்லை.  இதைப்புரிந்து செயல்பட்டவர்களே அவரோடு இருந்தார்கள்.  புரியாதவர்கள் மாண்டு போனார்கள்...

அங்கே சில வினாடிகள் நிசப்தம் நிலவியது. மிர்சா ஷேக் தன் கண்களை மூடிக்கொண்டு அந்த பொன்னான நாட்களை தன் விழித்திரையில் கொண்டு வந்தார்.  பெருமை பொங்கி வர அவை வியர்வைத் துளிகளாய் அவரது நெற்றியில் அரும்பியது.

பாபரும் அவரது பெருமையில் பங்கு கொண்டான்.  கண்ணை மூடிக்கொண்டு நின்றிருந்த அப்பாவை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான்.  அவனும் கண்ணை மூடிக்கொண்டு அவர் விழித்திரையில் விழுந்த காட்சிகளில் அவரோடு பங்கு கொண்டான்.  தினம் சொல்லும் கதை இத்தோடு முடிந்து விடும்.  ஆனால் இன்று அப்படி இல்லை....

மிர்சா ஷேக்கின் முகம் மாறியது.  கவலை ரேகைகள் அவரது முகத்தில் கோடு போட்டன. அவனது அணைப்பை விடுவித்து அவனுடைய தோள்கள் இரண்டையும் அவனுக்கு வலிக்கும் அளவுக்கு அழுத்தமாகப் பற்றினார். மண்டியிட்டு அவன் முகத்தோடு முகம் நோக்கினார்.  சற்றும் எதிர்பாராத பாபர் ஒரு பயம் கலந்த அதிர்ச்சியோடு அவன் தந்தை முகத்தை பார்த்தான்.  சிறு பனித்துளி போல அவர் கண்களில் கண்ணீர் அரும்பியது.

இதுவரை நீ கேட்டது தைமூரின் கதை.  அவரது ரத்தம் என்று கூறிக்கொள்ளும் என் கதை என்ன? பெர்கானா என்னும் ஒரு சிறிய ராஜ்ஜியம்!  மனிதர்களை விட ஆடு மாடுகளே அதிகம் கொண்டாடும் ராஜ்ஜியம்! அடுத்து உள்ள சமர்கண்ட் (Samarkand) ராஜ்ஜியத்தை பார்.. என் அண்ணன் அரசாளுகிறான்! ஹிந்துகுஷ் (Hindukush mountains) மலையை அடுத்து அங்கே செல்வச்செழிப்பு நிறைந்த காபூல் (Kabul)  நகரைப்பார் அங்கேயும் என் ஒன்று விட்ட சகோதரன் (Cousin) ஆளுகிறான்.  இவர்களை ஒப்பிடும்போது நான் பரம ஏழை.  ஆனாலும் தைமூரின் ரத்தம்!  நாங்கள் எல்லோரும் தைமூர் ரத்தம். அவர்கள் ரத்தத்தில் தைமூரின் பெருமை எவ்வளவு ஓடுகிறதோ அது என் ரத்தத்திலும் ஓடுகிறது!

அப்பா....

பாபரின் குரலை செவிமடுத்து தொடர்ந்தார்... தைமூரின் பரம்பரை என்று மார் தட்டிக்கொள்ளும் எங்களை எல்லோரையும் பார்... உலகத்தை தன் குடைக்கு கீழே கொண்டு வர நினைத்த தைமூர் எங்கே? நாங்கள் எங்கே? ஏதோ இனத்தலைவர்கள் போல எங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றோம்.  இன்று தைமூர் உயிரோடு வந்தால் எங்களை நோக்கி காரி உமிழ மாட்டார்? பல தேசங்களின் அரசர்கள் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்ட தைமூரின் வாரிசுகள் இப்படி ஆளுக்கொரு பக்கம் பிரிந்து நிற்பதைக் கண்டால் எங்களை மன்னிப்பாரா? இல்லை அவர் மனிப்புக்குத்தான் நாங்கள் தகுதியானவர்களாக இருக்கின்றோமா?

மிர்சா ஷேக் தனது உறுதியான பிடியை பாபரின் தோளிலிருந்து தளர்த்தவில்லை.  பாபர்....உனக்கு புரிந்துகொள்ளும் வயதாகிவிட்டது.  என் காலத்திற்கு பிறகு என் ஒரே வாரிசான நீ, நாடாள வந்தால் தைமூரைப்போல் உலகாள வேண்டும்.  நம் முன்னோருக்கும் தைமூருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம்.  உலகை கைப்பற்றி ஆள்வதன் மூலமே அந்தக் கடனை நான் திரும்ப செலுத்த முடியும். 

மறவாதே மகனே.. “தைமூரின் ரத்தம் உன் ரத்தம். உன் ரத்தம்...” கவலைக்கோடுகள் மறைந்து கண்ணீர் கோடுகள் மட்டுமே இருந்த அவரது முகத்தில் ஒரு ஆவேசம் இருந்தது. “தைமூரின் ரத்தம் உன் ரத்தம்..” மீண்டும் சொன்னார்.

பாபரும் உதட்டசைவில் சொன்னான்.. ““தைமூரின் ரத்தம் என் ரத்தம்..”
 

வெற்றிப்படிகள் - சரித்திரத்தொடர்


முன்னுரை


யாரை பற்றியும் குறை சொல்ல நான் இதை எழுதவில்லை....

இது என்னைப்பற்றிய புகழுரையும் இல்லை..

இந்த சரித்திரத்தில் உண்மையை தவிர வேறேதும்

எழுதுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன்..

பாசம், நட்பு, துரோகம், விரோதம், நல்லது, தீயது

நண்பர், பகைவர், தந்தை, தாயார்...சகோதரன்...

எல்லாவற்றை பற்றியும், எல்லோரை பற்றியும்

நான் கண்டறிந்த உண்மைகளை மட்டுமே எழுதியுள்ளேன்

படிப்பவர்கள் காயமடைந்தால்,

அதற்க்கு நானே பொறுப்பு..

மன்னித்தருள்க...

 

இப்படிக்கு...

ஜாகிர்-உத்-தீன் முகமது பாபர் மிர்சா,

(முகலாய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தவர்)

பாபர்நாமா, முதல் பக்கம்..