அரவான் என்றால் என்ன ? அரவான் யார் ? முதலில் தலைப்பை புரிந்து
கொள்வோம்.
18 நாள் (மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது) கூவாகத்தில்
திருவிழா நடைபெறுவதும் இந்தக் கதையை ஒட்டித்தான்.
அரவான்-ஓடு இருப்பதால் திருநங்கைகள் அரவாணிகள் என்று அழைக்கப்
பெறுகின்றனர். இது ஒரு தகவலோடு சரி, கதைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை
கதைக்களம் 18ஆம் நூற்றாண்டு, மதுரைப்பக்கம் -
என்னைப்போன்ற முழுவதுமாக நகரத்தில் வளர்ந்த ஒருவனால் இந்தத் பழந்தமிழை புரிந்து
கொள்ள முடியுமா என்ற சந்தேகம் டிக்கெட் வாங்கிய பிறகே வந்தது. நல்லவேளை, படத்தில் வசனங்கள் எல்லாம் தமிழ்
ஆர்வம் உள்ள அனைவராலும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாகத்தான் இருக்கிறது.
18ஆம் நூற்றாண்டு என்று நம்மையும் சேர்த்து கதை
இழுத்துச் செல்கிறது. படம் முடிந்த பிறகே 21ஆம் நூற்றாண்டு நினைவுக்கு வருகிறது.
கதை முழுவதிலும் நம்மை ஒரு silent spectator-ஆக ஆக்குகிறார் இயக்குனர். சபாஷ்!
கதையின் ஆரம்பக்காட்சிகள் மெல் கிப்சனின்
அபோகலிப்டோ (Apocalypto) படத்தை நினைவு கூறுகிறது. பல படங்களை பார்ப்பதால்
இந்தக்குறை என்னுடையதாக கூட இருக்கலாம். சரி.. கதைக்கு வருவோம்.
பணம் படைத்தவர்களிடம் திருடுவதையே தொழிலாக
கொண்டுள்ளது வெம்பூரில் உள்ள “கொத்து” எனப்படும் கூட்டம். முதல் காட்சியில் அவர்களுடைய திருட்டு அருமையாக
படமாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் தலைவன் கொம்பூதி (பசுபதி). திருடர்களாக
இருந்தாலும் நியாயம், நேர்மை அனைத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் (விவேகாவின் ஊரே ஊரே
பாடல் வரிகள் அருமை!)
இப்படி இருக்கையில், இவர்கள் ஊரின்
பெயரைச்சொல்லி தனியாளாக ஒருவன் திருடிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது. (தனியாளாக திருடுவது
வெம்பூர் ஸ்டைல் இல்லை.)
கொம்பூதி அந்தத் தனியாள் யாரென்று கண்டுப்பிடிக்கின்றான். அவன் தன் பெயர் வரிப்புலி (ஆதி) என்று
அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவனை பிடித்து ஊர்-மாறாட்ட குற்றத்திற்காக தண்டிக்க
நினைக்கும் போது, வரிப்புலியின் துணிச்சலும், திறமையும் கொம்பூதியை
கவர்கிறது. தனியாளாக இருப்பதால் (வரிப்புலி
அப்படி சொல்லிக்கொள்வதால்), ஊரு பெருசுகளின் எதிர்ப்பையும் மீறி, தங்கள் கொத்து கூட்டத்தோடு
வரிப்புலியை ஒருவனாக சேர்த்துக் கொள்கிறான் கொம்பூதி. வரிப்புலியும் கொம்பூதி மற்றும் அவனுடைய
கூட்டத்திற்கு நன்றி உடையவனாக இருக்கிறான். கொம்பூதியின் தங்கை சிமிட்டிக்கு வரிப்புலியின்
மேல் காதல் வருகிறது, ஆனால் அவன் தனக்கு ஏற்கனவே மணமாகிவிட்டது என்று கூறி அவளை நிராகரிக்கிறான்.
ஒரு முறை ஒரு பெரிய இடத்தில் திருடும்போது,
காவலர்கள் கொம்பூதி, வரிப்புலி மற்றும் அவர்கள் கூட்டத்தை துரத்துகிறார்கள். அதில்
ஒரு காவலன் (நடிகர் கரிகாலன்) வரிப்புலியை “சின்னா” “சின்னா” என்று கூறிக்கொண்டு வெறியோடு
துரத்துகிறான்.
வரிப்புலியின் பின்னணி தெரிய வருகிறது. அவன் உண்மையான பெயர் சின்னா. சின்னவீரான்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன். அந்த
ஊரை காவல் காப்பவர்களில் ஒருவன்.. ஒரு நிகழ்வின் போது அவன் பலியாளாக ஆக்கப்படுகிறான்...
சின்னா ஏன் வரிப்புலியாக மாறினான்? ஏன் அவனை துரத்துகிறார்கள்?
அவனை ஏன் பலி கொடுக்க வேண்டும்? இதற்கான விடைகளே மீதிக்கதை.
இவர் மட்டும் தான் முக்கியம் என்று எந்த ஒரு கதா
பாத்திரத்தையும் சொல்லிவிட முடியாது. எல்லோரும்
தன் பங்கை நடித்து.. இல்லை இல்லை.. வாழ்ந்தே இருக்கிறார்கள். அந்த ஊர் ராஜா
பாளையக்காரர் (கபீர் பேடியா விஜயசந்தரா என்று தெரியவில்லை), அவரது இளம் மனைவி (ஷ்ருதி
பிரகாஷ்), ஒரு தேவதாசி (ஸ்வேதா மேனன்), ஜவ்வாது விற்பவன் (பரத்), மாத்தூர் என்னும்
இன்னொரு கிராமத்தார் (இதில் ஒருவன் கரிகாலன்), சின்னாவின் மனைவி தன்ஷிகா
(வனப்பேச்சி) (கொள்ளை அழகு!), அர்ச்சனா கவி (சிமிட்டி) ஒரு கதா பத்திரத்தில் டி.கே.கலா,
மற்றும் பெயர் தெரியாமல் மனதில் நிற்கும் பலருடன் – நட்பு, துரோகம், கொலை, வன்மம்,
மர்மம், காதல், பாசம் என்று எல்லாவற்றையும் சரி விகிதத்தில் கலந்து நமக்கு ஒரு
விருந்து படைத்து இருக்கிறார் வசந்தபாலன். சிங்கம்புலியின் கதாபத்திரத்தை மட்டும் கொஞ்சம்
சீரியஸ்-ஆக சித்தரித்து இருக்கலாம்.
காமெடி என்ற பெயரில் ஒரே கத்தல், சிறியதாக இருந்தாலும் கடையாணியாக இருக்கும்
பரத் கதாபாத்திரம். கண் இமைக்கும்
நேரத்தில் வந்து போகும் அஞ்சலி என்று ஒரு 18ஆம் நூற்றாண்டு கூட்டமே இருக்கிறது!
கதை ஜெட் வேகம் ராக்கெட் வேகம் என்று சொல்ல
முடியவில்லை என்றாலும், தொய்வில்லாமல் போகிறது.
பின்னணி இசை யாரு? நம்ம பாடகர் கார்த்திக்! சில இடங்களில் நிசப்தத்தைக் கூட பின்னணி இசையாக
போட்டு அசத்துகிறார். பாடல்களும் அருமை! மற்ற
சக இசை அமைப்பாளர்கள் தூக்கம் இழந்ததாகக் கேள்வி! வாழ்த்துக்கள் கார்த்திக்!
ஒளிப்பதிவு சித்தார்த்– 18ஆம் நூற்றாண்டுக்குள்
இழுத்துச் செல்கிறார். அதுவும் இரவு நேர காட்சிகளில் காடுகளையும், வறண்ட புழுதி
நிலத்தையும் மிக அழகாக கைப்பற்றி இல்லை கண்பற்றி இருக்கிறார்! ஒரு 18ஆம்
நூற்றாண்டு தமிழகம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
கலை இயக்குனர் விஜய் முருகன், படத்தொகுப்பு பிரவீன்
மற்றும் ஸ்ரீகாந்த், உடை வடிவமைப்பு ராஜேந்திரன் என்று எல்லோரும் ஒரு இம்மி
பிசகாமல் கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.
என் மதிப்பீடு 4.5 out of 5.
பி.கு.1 : என்னோடு சேர்ந்து படம் பார்த்த மற்ற
10 பேருக்கும் நன்றி (அரங்கத்தில் அவ்வளவு தான் கும்பல்!)
பி.கு.2 :போகவர டாக்ஸி சார்ஜ் 20 திர்ஹம்,
டிக்கெட் 30 திர்ஹம், பாப்கார்ன், காபி செலவு ஒரு 10 திர்ஹம். மொத்தம் 60 திர்ஹம்.
இந்திய ரூபாயில் 780/- - இதே அளவு செலவு செய்து பார்த்த ஒரு “தலவலி” படத்தை
ஒப்பிடும் போது....அரவான் - ஒவ்வொரு பைசாவும் வசூல்!

