Tuesday 31 January 2012

பெண் சிங்கமும்... மறு ஜென்மமும்...

இன்று காலை முக நூலில் ஒரு சகோதரி போட்ட ஒரு ஆண் சிங்கத்தின் படம் காலைப் பொழுதை உற்சாகமாக்கியது ! அதன் பிடரியும் பார்வையும் உட்கார்ந்த கம்பீரமும் கொள்ளை அழகு! அனால் உண்மையில் ஆண் சிங்கம் படு சோம்பேறி.  பெண் சிங்கம் அடித்து கொண்டு வரும் உணவை முதல் ஆளாக போய் ஒரு கட்டு கட்டிவிட்டு மரத்தடியில் “ஆ..”-என்று படுத்துக்கொண்டு உறங்கும். நம்மிடையே எத்தனை பெண் சிங்கங்கள் உள்ளனர்?? யாரையெல்லாம் பெண் சிங்கத்திற்கு ஒப்பிடலாம்? சிந்தனை சிறகடித்தது...இது ஒரு புறம இருக்க...

மறு ஜென்மம் உண்டா? அப்போதைய மன நிலைக்கு ஏற்றபடி ஆம் / இல்லை என்று நானே கூறிக்கொள்வதுண்டு.  சில சமயம் உண்டு... சில சமயம் இல்லை.. தீர்கமான முடிவுக்கு வந்தது இல்லை..

இந்த சிந்தனைகள் எல்லாம் அலுவலக வேலையில் தற்காலிகமாக மறந்து போனாலும், அடி தட்டில் மனக் குரங்கு தாவிக்கொண்டே தான் இருக்கு.  இப்படி சிங்கம், மறுஜென்மம் என்று ஒரு சிந்தனை அவியல் ஆகிக் கொண்டிருந்தது.

இது போன்ற நேரத்தில் எனக்கு அமைதி தருவது சரித்திரம் போல வேறு மருந்தே இல்லை. தனியாக உட்கார்ந்து படிக்க வேண்டும் என்பதில்லை..சரித்திர நிகழ்வுகளை அசை போட்டாலே போதும்... மனம் அமைதி பெறும்..

===============================================================================================

முகமது கோரி தன் ரத்தக் களி ஆட்டத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் போய் சேருவதற்கு முன் குதுப்புதீன் அய்பக் என்ற அடிமையை டில்லிக்கு ராஜாவாக வைத்து விட்டுப்போனான் (இதன் காரணமாகத்தான் அடிமை சாம்ராஜ்யம் “Slave Dynasty” என பெயர் பெற்றது).  அடுத்து வந்த இல்துமிஷ் தன் பங்குக்கு நன்றாகவே ஆட்சி செய்தார்.  ஆனால் அவருக்கு வாய்த்த மகன்களோ அது இது மது மாது என்று எல்லா தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி ஒரு அரசனுக்கு உண்டான எந்த தகுதியும் இல்லாமல் போனார்கள்.  அந்தக் குறையை தீர்க்கத்தான் அவருடைய மகள் இருந்தாள்.  அவள் பெயர் ரஸியா பேகம்.  வீரத்தில் மட்டுமல்ல, எல்லோரிடமும் பழகுவதிலும் சரி, அறிவிலும் சரி ரஸியா சுல்தான் பேகம் சிறந்து விளங்கினாள்.

சாகும் தருவாயில் இல்துமிஷ் தன் மகளைத்தான் பட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசைப் பட்டார். ஆனால் பிற்போக்கு சிந்தனை கொண்ட அமைச்சர் குழு “பெண்ணாகப் பிறந்தவள் மண்ணாளுவதா?” “அணங்கிற்கு நாங்கள் இணங்கி போவதா?” என்று பஞ்ச் வசனம் பேசி, ரஸியாவின் ஒன்றுவிட்ட சகோதரன் “ருக்னுதீன் பிரோஸ்” என்பவனை ராஜாவாக ஆக்கினார்கள்.  அவனோ “ஒன்றுவிட்ட” மட்டும் இல்லாமல் வெட்கம், மானம், சூடு, சொரணை, வீரம், நிதானம் என்று “பலதையும் விட்ட” சகோதரனாக இருந்தான்.  அவனது தாய் ஷா துர்கான் – நரகத்தின் மிச்ச மண்ணை எடுத்து செய்யப்பட்டவள். பணிப் பெண்ணாக இருந்தவள் மணி மகுடம் சூட்டிக் கொள்ள ஆசைப்பட்டாள். தன் மகனை அந்தப்புரத்தில் தள்ளி கதவை தாளிட்டாள்.

பொழுது புலர்ந்தது-சாய்ந்தது, நல்லது-கெட்டது, என்று எதுவும் தெரியாமலேயே அந்தப்புரமே கதியாகக் கிடந்தான் பிரோஸ்.  இங்கே தாய் பேயாட்டம் போட்டாள். அவள் வைத்ததே சட்டம், மீறியவர்கள் தண்ட்டிக்க பட்டார்கள்.  முன் ஆட்சியில், படித்தவர்கள், சான்றோர்கள் அமர்ந்த இருக்கையில் இன்று கேள்விக்குரியவர்களும் கேலிக்குரியவர்களும் அமர்ந்தார்கள்.  நல்லது சொன்னவர்கள் காணாமல் போனார்கள். இத்தனைக்கும் நடுவில் மக்களின் நன்மதிப்பை பெற்ற ரஸியா தனது சரியான நேரத்திற்காக காத்திருந்தாள். 

இவர்களின் அராஜக ஆட்சியை எதிர்த்து மக்கள் போர் கொடி பிடித்து பொங்கி எழ, இது தான் சரியான சமயம் என்று குறுநில மன்னர்களும், அமைச்சர்களும் தாய்-மகன் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தவுடன் தான், நிலைமையின் தீவிரம் ஷா துர்க்கானுக்கு உரைத்தது.  இது வரையிலும் தன் மகனை ஒரு மாவீரன் என்றே அவள் நம்பியது தான் வேடிக்கை.  அந்தப்புரத்திலிருந்து மகனை தட்டி எழுப்பி “படுத்தது போதும் பொங்கி எழுடா மகனே” என்று ஆணையிட்டாள்.  சாதாரண உடையே பாரம் என்று நினைத்தவனை போர் உடை பூணச்சொன்னால் என்ன செய்வான்?  கேளிக்கைகளால் நலிந்து போன அவன் போருக்கு போன அழகு பலருக்கு எரிச்சலாகவும் சிலருக்கு கேலியாகவும் இருந்தது. அவன் அந்தப்பக்கம் போன உடன் இந்தப்பக்கம் வீரர்கள் ஷா துர்கானை சிறை பிடித்தார்கள். ரஸியா இப்போது ஆட்சி பீடத்தில் ! 

தாயையும், ஒப்புக்காக போருக்கு போன சேயையும் பிடித்து வந்து சிறையில் அடைத்தார்கள். ஆசைதீர சில நாள் சித்ரவதை செய்துவிட்டு, நவம்பர் 9, 1236 சுபயோகம் கூடிய சுப தினத்தில் இருவரையும் பரலோகம் அனுப்பி வைத்தார்கள் வீரர்கள்.

மக்களின் நன் மதிப்பை பெற்று ரஸியா சில காலம் ஆண்டு வந்தாலும், “ஒரு பெண்ணின் கீழ் இருப்பதா? வெட்கம்!!..” என்று ஒரு கூட்டம் சதி ஆலோசனை செய்து கொண்டே தான் இருந்தது. 

டில்லியிலிருந்து 150 மைல் தொலைவில் சர்ஹிந்த் என்ற பகுதியை ஆண்டு வந்த இக்தியாருதின் அல்துனியா என்ற அரசனோடு சதியாலோசனை செய்து ரஸியாவின் ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டது அந்தக் குள்ளநரி கூட்டம்.  இதை அறிந்ததும், அவன் இங்கு வருவதற்குள் நாமே அங்கு போய் அவனை ஒரு கை பார்ப்போம் (attack is the best form of defence) என்று படையுடன் புறப்பட்டாள் ரஸியா சுல்தான் (ஆம்.  சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரஸியா பேகம்.  (எதுக்கு வம்பு? நாமும் சுல்தான் என்றே அழைப்போமே!).

வீரம் விவேகம் இருந்தாலும் விதி ரஸியாவிற்கு எதிராகவே வேலை செய்தது.  உடன் வந்த படை தளபதிகள் பலர் பாதி வழியில் காலை வாரிவிட, சொச்ச வீரகளோடும் மிச்சத்திற்கு  வீரத்தோடும் போருக்கு போனாள்.  ஆனால், அந்தப் போரில் அவளுக்கு வெற்றி வேறு விதமாக வந்தது.  அவளின் அழகும், அறிவும் சாதுர்யமான பேச்சும் அல்துனியாவை கிறங்க அடித்தது.  செய்ய இருந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ரஸியாவையே மணம் முடித்தான் அல்துனியா.

தவறான தகவல் கொடுத்த கயவர்களை ஒரு கை பாப்போம் என்று கணவனும் மனைவியும் கை கோர்த்துக்கொண்டு, மோத இருந்த இரண்டு படைகளோடும் மறுபடி டில்லி புறப்பட தயாரானார்கள்.  விதி என்னும் அரக்கன் கடைசி முறையாக அவர்களை இருவரையும் பார்த்து சிரித்தான். 

கூட இருந்த வீர்களில் (முக்கியமாக மெய்கப்பாளர்கள்) இந்தப் பெண் மறுபடி டில்லி வந்தால் பெண்ணாட்சி நிலைத்து விடும் என்று அவர்கள் இரவு உறங்கும் நேரம் பார்த்து கூடாரத்திற்குள் புகுந்து கணவன்-மனைவி இருவரையும் தீர்த்து கட்டினார்கள்.

மூன்று ஆண்டுகள் சில மாதங்கள் மட்டுமே டில்லியை கலக்கிய முதலாவதும் கடைசியுமான பெண் சிங்கம் ரஸியா சுல்தான் பேகம்..

===============================================================================================
முதற்க்கண் இதுவரை பொறுமையாக படித்ததற்கு நன்றி !

பின் குறிப்பு:  பெண் சிங்கம் சரி.. ரஸியா சுல்தான் பேகம் மறுஜென்மம் எங்கே வருது ? 

யோசிச்சி பாருங்க...சில வருடங்களே ஆண்ட ரஸியாவிற்கு டில்லியை எப்படி எல்லாம் ஆளவேண்டும் என்ற நிறைவேறாத ஆசைகள் இருந்ததோ ? 

அவளே பின்னால் டில்லியை 15  ஆண்டுகள் ஆண்டு இருக்கலாம் இல்லையா?

ஆண் வர்கத்தின் ஒவ்வொரு தடையையும் தகர்த்து எறிந்து இருக்கலாம் இல்லையா?

கடைசியில் மெய் காப்பாளர்களே அவளது உயிரை பறித்து இருக்கலாம் இல்லையா ?

பெயர் மட்டும் வேறாக இருந்து இருக்கலாம்.. இ-ந்-தி-ரா-....

அட.. கண்டு புடிச்சுடீங்களே!!

Monday 30 January 2012

இது நடந்து இருந்தால்....


வெளி வந்து பல மாதங்கள் / வருடங்கள் கழித்து 12B  படம் பார்த்தேன்.  கிளைமக்சில் தான் கதை ‘அட!’ என்று புரிந்தது.  இது நடந்திருந்தால் இப்படி ஆகி இருக்கும்.. அது நடந்திருந்தால் அப்படி ஆகி இருக்கும் என்று (ஷாம், சிம்ரன், ஜோ) கதை parallel-ஆகா போய் நச்சுன்னு முடிகிறது.   

அதன் சிந்தனை தொடர்ச்சி இந்திய வரலாறு பற்றிய சிந்திக்க வைத்தது ...

இன்று அதிகாரத்தின் உச்ச கட்ட இடமாக இருக்கும் டில்லி, (துபாய் மாதிரி) திடீரென்று வானத்திலிருந்து குதித்த நகரம் இல்லை. ஒரு காலத்தில் பொட்டல் காடாகத்தான் இருந்து இருக்க வேண்டும். கி.மு.வில் வந்த மெகாஸ்தனிஸ், யுவான் சுவாங் போன்ற பொறுப்பான பயனிகளிளிருந்து... சும்மானா வந்து காபி டிபன் சாப்பிட்டுவிட்டு போன பெயர் தெரியாத வெளி நாட்டு பயணிகள் வரை அந்த கால கட்டத்தில் டில்லியை பற்றி எந்த குறிப்பும் உருப்படியாக எழுதவில்லை.  

கி.பி. 736ல் தோமார் என்ற ராஜபுத்திர வம்சா வழியினர் (இன்றைய ஹரியனவிளிருந்து வந்து) தில்லிகா என்ற பெயரில் ஒரு நகரை உருவாக்கினர்.  அந்த பரம்பரையில் வந்த ஆனாங் பால் என்ற ராஜா தான் லால் கோட் எனப்படும் செங்கோட்டையை கட்டினார்.  (ஷாஜஹான் கட்டியது வேறு) அதன் மெயின் கேட்-இல் சும்மா மிரட்டலுக்காக ரெண்டு பெரிய சிங்க சிலைகளும், கோட்டையின் நடுவில் ஆதிசேஷன்-ஆகா கருதப்படும் ஒரு பாம்பு சிலையும் இருந்தது.  அதுக்கு மேல் ஒரு ஸ்துபியும் அதன் உச்சியில் ஒரு கருட சிலையும் இருந்தது.  மக்கள் குறைகளை சொல்ல அல்லது ராஜாவை கூப்பிட ஒரு கால்லிங் பெல்லும் (அட ஆராய்ச்சி மணிதாங்க..) இருந்தது.  99.72% சுத்தமான இரும்பால் ஆன அந்த ஸ்தூபி இன்றளவும் குதுப் மினார் அருகில் ஜிங்-னு இருப்பதை பார்க்கலாம். மேலே உள்ள கருடன் சிலை பறந்து போன இடம் தெரியவில்லை.  மற்றபடி அந்த லால் கோட்டையின் சிதிலங்கள் மட்டுமே இன்று நம் பார்வைக்கு உள்ளன.

இந்த தோமர்கள் அடுத்த 300 வருடங்கள் ஜாலியாக ஆண்டு விட்டு சௌஹான் என்ற ராஜபுதிரர்களுக்கு வழி விட்டார்கள். அதுல கடைசியா வந்த ராஜா தான் (மூன்றாம்) ப்ரித்விராஜ் சௌஹான்.  ப்ரித்விராஜ் சௌஹான் / சம்யுக்தா காதல் கதை நமக்கு தெரியும்.  சம்யுக்தாவின் அப்பா (கனோசி நாட்டு ராஜா) ஜெயச்சந்திரன்-க்கு கடைசி வரை சௌஹானால் ஏற்ப்பட்ட அவமானம் தீரவே இல்லை. (எந்த மாமனாருக்கு தான் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு?)  Professional life – Personal life ரெண்டையும் ஏகமாக ரொம்பவே குழப்பி இருந்து இருக்கார்.

இந்த கால கட்டத்துல தான் முகமது கோரி –இந்திய மண்ணில் கால் வைத்த ஆப்கானிய அரசன், படை எடுத்து வந்தப்ப நம்ம ப்.சௌ. அண்டை அரசர்கள் எல்லாரையும் ஒண்ணா சேர்த்து சண்டை போட்டு வெற்றியும் கண்டார். ஆனால் இரண்டாம் முறை கோரி பெரிய படையுன் வந்தபோது, ஜெயச்சந்திரன் மட்டும் உதவி பண்ணி இருந்திருந்தா இரண்டாம் முறையும் வெற்றி கிடைத்திருக்கும்.  ஆனால் விதி வேறாக விளையாடி, முகமது கோரி அடிமை சம்ரஜியதிருக்கு அஸ்திவாரம் போட்டது சரித்திரம்.

 சரி.. இதுக்கும் 12B கிளைமாக்ஸ்-க்கும் என்ன சம்பந்தம் ?  இது நடந்திருந்தால் எப்படி ஆகி இருக்கும்....

(ஒண்ணு) முதல் முறை போரில் நம்ம ப்.சௌ. வெற்றி பெற்றபோது முகமது கோரியை கைதியாக கொண்டுவந்தார்கள்.  அப்போ ப்.சௌ, பாவமாக நின்ற கோரியை பார்த்து.. ஹ ஹ .. பிழைத்துப்போ..னு சொல்லி சம்பிரதாயமாக உரைவாளை கோரி கழுத்துல லைட்டா வெச்சு எடுத்தார்.. (ரெண்டு) இரண்டாம் முறை மாம்ஸ் கிட்டருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கல....

ஒரு வேளை மேற்கூறிய ஒன்று ப்.சௌ. கோரியின் தலையை துண்டித்து இருந்தாலோ அல்லது இரண்டாவதாக மாமனாரின் உதவி கிடைத்திருன்தலோ.. இன்று இந்திய சரித்திரம் வேறு மாதிரியாக அல்லவா போயிருக்கும்? டேய்.. அங்க போனா தல மிஞ்சாது.. என்றோ சண்டைனு போனா குடும்பத்தோட சேர்ந்து வந்து கும்மி அடிசிடுவாங்கன்னு என்றோ பின்னால் வந்த (டில்லியை ரத்தக்கடலாக ஆக்கிய) தைமூர் முதற்கொண்டு யோசிச்சு இருக்கலாம் இல்லையா ??

My First Blog Posting..

Vakratunda Mahakaaya
Suryakoti Samaprabha
Nirvighnam Kuru Mey Deva
Sarva Kaaryeshu Sarvada

Meaning: The Lord with the curved trunk and a mighty body, who has the magnificance of a Million suns, I pray to you Oh Lord, to remove the obstacles from all the actions I intend to perform.