Sunday 4 March 2012

அரவான். – திரை விமர்சனம்



அரவான் என்றால் என்ன ?  அரவான் யார் ? முதலில் தலைப்பை புரிந்து கொள்வோம்.

 அரவான் என்ற ஒரு திருநங்கை (trans-gender) மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக வீரத்துடன் போர் புரிந்து கொண்டிருந்த போது, நம் படை வெல்ல வேண்டுமானால் நம்மில் ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும் என்று அர்ஜுனன் சொல்ல, அரவான் தன்னை பலி கொடுக்க முன் வருகிறான்.  ஆனால் தன் உயிர் தியாகத்திற்கு அரவான் கேட்கும் வரங்கள் மூன்று.  ஒன்று – அரவானின் உயிர் தியாகம் புகழ் வாய்ந்ததாக ஆக்கப்படவேண்டும். இரண்டு – அரவானின் தலையை பலி கொடுத்து வெட்டிய பிறகும் (வெட்டுண்ட தலையில் இருக்கும் கண்கள் மூலம்) மகாபாரத யுத்தம் முழுவதும் பார்க்கச் செய்ய வேண்டும்.  மூன்று - கல்யாணம் ஆகாமல் இறப்பவர்களை (முறைப்படி எரிக்காமலும், இறுதிக்கடன் எதுவும் செய்யாமலும்) புதைப்பதால்  தான் இறப்பதற்கு முன் மணம் புரிந்து தன் உடல் முறைப்படி தகனம் செய்யப்படவேண்டும்.  முதல் இரண்டு வரங்களும் கொடுக்க முடிந்தாலும், ஒரு திருநங்கையை, அதுவும் சாகபோகும் ஒருவரை மணம் புரிய யாரும் முன் வராததால், கிருஷ்ண பரமாத்மாவே மோகினி வடிவத்தில் வந்து அரவானை மணந்ததாக கதை.

18 நாள் (மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது) கூவாகத்தில் திருவிழா நடைபெறுவதும் இந்தக் கதையை ஒட்டித்தான்.  அரவான்-ஓடு இருப்பதால் திருநங்கைகள் அரவாணிகள் என்று அழைக்கப் பெறுகின்றனர். இது ஒரு தகவலோடு சரி, கதைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை



கதைக்களம் 18ஆம் நூற்றாண்டு, மதுரைப்பக்கம் - என்னைப்போன்ற முழுவதுமாக நகரத்தில் வளர்ந்த ஒருவனால் இந்தத் பழந்தமிழை புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் டிக்கெட் வாங்கிய பிறகே வந்தது.  நல்லவேளை, படத்தில் வசனங்கள் எல்லாம் தமிழ் ஆர்வம் உள்ள அனைவராலும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாகத்தான் இருக்கிறது.

18ஆம் நூற்றாண்டு என்று நம்மையும் சேர்த்து கதை இழுத்துச் செல்கிறது. படம் முடிந்த பிறகே 21ஆம் நூற்றாண்டு நினைவுக்கு வருகிறது. கதை முழுவதிலும் நம்மை ஒரு silent spectator-ஆக ஆக்குகிறார் இயக்குனர். சபாஷ்!

கதையின் ஆரம்பக்காட்சிகள் மெல் கிப்சனின் அபோகலிப்டோ (Apocalypto) படத்தை நினைவு கூறுகிறது. பல படங்களை பார்ப்பதால் இந்தக்குறை என்னுடையதாக கூட இருக்கலாம். சரி.. கதைக்கு வருவோம்.

பணம் படைத்தவர்களிடம் திருடுவதையே தொழிலாக கொண்டுள்ளது வெம்பூரில் உள்ள “கொத்து” எனப்படும் கூட்டம்.  முதல் காட்சியில் அவர்களுடைய திருட்டு அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் தலைவன் கொம்பூதி (பசுபதி). திருடர்களாக இருந்தாலும் நியாயம், நேர்மை அனைத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் (விவேகாவின் ஊரே ஊரே பாடல் வரிகள் அருமை!)
இப்படி இருக்கையில், இவர்கள் ஊரின் பெயரைச்சொல்லி தனியாளாக ஒருவன் திருடிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது.   (தனியாளாக திருடுவது வெம்பூர் ஸ்டைல் இல்லை.)  கொம்பூதி அந்தத் தனியாள் யாரென்று கண்டுப்பிடிக்கின்றான்.  அவன் தன் பெயர் வரிப்புலி (ஆதி) என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவனை பிடித்து ஊர்-மாறாட்ட குற்றத்திற்காக தண்டிக்க நினைக்கும் போது, வரிப்புலியின் துணிச்சலும், திறமையும் கொம்பூதியை கவர்கிறது.  தனியாளாக இருப்பதால் (வரிப்புலி அப்படி சொல்லிக்கொள்வதால்), ஊரு பெருசுகளின் எதிர்ப்பையும் மீறி, தங்கள் கொத்து கூட்டத்தோடு வரிப்புலியை ஒருவனாக சேர்த்துக் கொள்கிறான் கொம்பூதி.  வரிப்புலியும் கொம்பூதி மற்றும் அவனுடைய கூட்டத்திற்கு நன்றி உடையவனாக இருக்கிறான். கொம்பூதியின் தங்கை சிமிட்டிக்கு வரிப்புலியின் மேல் காதல் வருகிறது, ஆனால் அவன் தனக்கு ஏற்கனவே மணமாகிவிட்டது என்று கூறி அவளை நிராகரிக்கிறான்.

ஒரு முறை ஒரு பெரிய இடத்தில் திருடும்போது, காவலர்கள் கொம்பூதி, வரிப்புலி மற்றும் அவர்கள் கூட்டத்தை துரத்துகிறார்கள். அதில் ஒரு காவலன் (நடிகர் கரிகாலன்) வரிப்புலியை “சின்னா” “சின்னா” என்று கூறிக்கொண்டு வெறியோடு துரத்துகிறான். 

வரிப்புலியின் பின்னணி தெரிய வருகிறது.  அவன் உண்மையான பெயர் சின்னா.  சின்னவீரான்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன். அந்த ஊரை காவல் காப்பவர்களில் ஒருவன்.. ஒரு நிகழ்வின் போது அவன் பலியாளாக ஆக்கப்படுகிறான்...


சின்னா ஏன் வரிப்புலியாக மாறினான்? ஏன் அவனை துரத்துகிறார்கள்? அவனை ஏன் பலி கொடுக்க வேண்டும்? இதற்கான விடைகளே மீதிக்கதை.

இவர் மட்டும் தான் முக்கியம் என்று எந்த ஒரு கதா பாத்திரத்தையும் சொல்லிவிட முடியாது.  எல்லோரும் தன் பங்கை நடித்து.. இல்லை இல்லை.. வாழ்ந்தே இருக்கிறார்கள். அந்த ஊர் ராஜா பாளையக்காரர் (கபீர் பேடியா விஜயசந்தரா என்று தெரியவில்லை), அவரது இளம் மனைவி (ஷ்ருதி பிரகாஷ்), ஒரு தேவதாசி (ஸ்வேதா மேனன்), ஜவ்வாது விற்பவன் (பரத்), மாத்தூர் என்னும் இன்னொரு கிராமத்தார் (இதில் ஒருவன் கரிகாலன்), சின்னாவின் மனைவி தன்ஷிகா (வனப்பேச்சி) (கொள்ளை அழகு!), அர்ச்சனா கவி (சிமிட்டி) ஒரு கதா பத்திரத்தில் டி.கே.கலா, மற்றும் பெயர் தெரியாமல் மனதில் நிற்கும் பலருடன் – நட்பு, துரோகம், கொலை, வன்மம், மர்மம், காதல், பாசம் என்று எல்லாவற்றையும் சரி விகிதத்தில் கலந்து நமக்கு ஒரு விருந்து படைத்து இருக்கிறார் வசந்தபாலன். சிங்கம்புலியின் கதாபத்திரத்தை மட்டும் கொஞ்சம் சீரியஸ்-ஆக சித்தரித்து இருக்கலாம்.  காமெடி என்ற பெயரில் ஒரே கத்தல், சிறியதாக இருந்தாலும் கடையாணியாக இருக்கும் பரத் கதாபாத்திரம்.  கண் இமைக்கும் நேரத்தில் வந்து போகும் அஞ்சலி என்று ஒரு 18ஆம் நூற்றாண்டு கூட்டமே இருக்கிறது!

கதை ஜெட் வேகம் ராக்கெட் வேகம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும், தொய்வில்லாமல் போகிறது.

பின்னணி இசை யாரு? நம்ம பாடகர் கார்த்திக்!  சில இடங்களில் நிசப்தத்தைக் கூட பின்னணி இசையாக போட்டு அசத்துகிறார்.  பாடல்களும் அருமை! மற்ற சக இசை அமைப்பாளர்கள் தூக்கம் இழந்ததாகக் கேள்வி! வாழ்த்துக்கள் கார்த்திக்!

ஒளிப்பதிவு சித்தார்த்– 18ஆம் நூற்றாண்டுக்குள் இழுத்துச் செல்கிறார். அதுவும் இரவு நேர காட்சிகளில் காடுகளையும், வறண்ட புழுதி நிலத்தையும் மிக அழகாக கைப்பற்றி இல்லை கண்பற்றி இருக்கிறார்! ஒரு 18ஆம் நூற்றாண்டு தமிழகம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். 

கலை இயக்குனர் விஜய் முருகன், படத்தொகுப்பு பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்த், உடை வடிவமைப்பு ராஜேந்திரன் என்று எல்லோரும் ஒரு இம்மி பிசகாமல் கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.

என் மதிப்பீடு 4.5 out of 5.


பி.கு.1 : என்னோடு சேர்ந்து படம் பார்த்த மற்ற 10 பேருக்கும் நன்றி (அரங்கத்தில் அவ்வளவு தான் கும்பல்!)

பி.கு.2 :போகவர டாக்ஸி சார்ஜ் 20 திர்ஹம், டிக்கெட் 30 திர்ஹம், பாப்கார்ன், காபி செலவு ஒரு 10 திர்ஹம். மொத்தம் 60 திர்ஹம். இந்திய ரூபாயில் 780/- - இதே அளவு செலவு செய்து பார்த்த ஒரு “தலவலி” படத்தை ஒப்பிடும் போது....அரவான் - ஒவ்வொரு பைசாவும் வசூல்!

4 comments:

  1. lovely review Anand....planning to watch next week... (also thanks for the info on Aravaan)...

    ReplyDelete
  2. Wonderful review Anand. I would love to see this movie, but first want to read the source book! Hereafter, only after reading your reviews, will watch that movie. Can save money and the headache! If there were only 10 people in the movie hall, how will it be profitable for them to run this movie....that too on a weekend for you? Just wondering.

    ReplyDelete
  3. Thanks Buvana ! Glad to know that you liked my review. Will definitely post my reviews for any good movies that come. :)

    Since I have also not read the Sahitya Academy Winner book "Kaaval Kottam" by Su.Venkatesan, I did not make a mention about this in my review. The titles mentioned "Additional Story" by Vasanthabalan; I was not sure how much "addition" he has made to the original.

    Atleast 10 was a decent crowd ! Once I went for the movie "A Wednesday" (Nazrudeen Shah, Anupam Kher). I was the only person there for the show and the ticket counter guy forewarned me that he will refund me the cost of the ticket and the show would be cancelled, in case no one else turns up. Luckily, some 4 or 5 people came up at the last moment to save the day. Except for the initial Friday, most movies don't last a week here. :)

    ReplyDelete