Wednesday 5 September 2012

பகுதி 1 - தைமூரின் ரத்தம்!


அத்தியாயம் 1 - புறாவோடு பறந்த உயிர்....

கி.பி.1494 - மத்திய ஆசியா - பெர்கானா அமீரகம் (Emirate of Ferghana) - முதுவேனிர்காலம்...

தைமூர் (Taimur or Timur) என்ற சொல்லுக்கு இரும்பு எனப் பொருள்படும். அந்த இரும்பை போல உடலும் மனமும் படைத்த தைமூர் போருக்கு போனால் அவருடைய போர்க்குதிரைகள் உதிரத்தை வியர்வையாக சிந்தும் என்பது வரலற்று உண்மை. அன்று அறியப்பட்ட உலகத்தில் பாதியை வென்று தன் பாயும்புலிக்கொடியை நாட்டினார் தைமூர்.  சிறு வயதில் ஒரு போரில் காலில் ஏற்ப்பட்ட காயத்தால், விந்தி விந்தி நடக்க வேண்டி இருந்தாலும், டெல்லியிலிருந்து மேற்கு ஆசியா வரையிலும், பாரசீகதிலிருந்து வோல்கா நதி வரையில் அவரது சாம்ராஜ்யம் பரவி இருந்தது. தைமூர், அடுத்து சீன தேசத்தை கைபற்ற நினைத்த போது, ஆண்டவன் அவரை தன்னோடு இருக்குமாறு பணித்துவிட்டார்.

பெர்கானா அரசர், மிர்சா உமர் ஷேக் (Mirza Umer Sheikh) தனது 12 வயது மகன் பாபருக்கு தினமும் சொல்லும் கதையை மீண்டும் கூறினார்.  இவன் தினமும் கேட்க்கும் கதை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத கதை. அந்தக் கதையை ஒரு கவிதை நயத்தோடு சொல்வார்.  ஒவ்வொரு முறையும் அந்தக் கதையின் அழகில், அவர்சொல்லும் நயத்தில், அந்த ஏற்ற இரக்கத்தில் உருகிப்போவான் பாபர். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தகவல்; ஒரு புதிய பரிமாணம்; ஒரு புதிய நயம் இருக்கும்.  ஆனால் அதன் உச்சக்கட்டம் மட்டும் என்றும் மாறியதே இல்லை.  அவர் வார்தைக்களின் கம்பீரம் குறைந்ததே இல்லை! 

உன் கேள்வி எனக்கு புரிகிறது பாபர்.  ஒரு தனி மனிதனால் எப்படி இவ்வாறு ஒரு பேரரசை நிறுவ முடிந்தது?

தைமூர் வீரம், விவேகம் நிறைந்தவர் மட்டுமல்ல. அவர் ஒரு மாபெரும் தலைவர்.  என் பாட்டனார் கூறியுள்ளார், தைமூரின் கண்கள் ஒளி நிறைந்தவை என்று.  அவரது பார்வை பார்ப்பவரின் உள்ளத்தை, ஆன்மாவை ஊடுருவும்! அவரது வார்த்தைகள் ஒரு கோழைக்கு கூட வீரம் ஏற்படுத்தும்! அவரின் ஆளுமைக்கு உட்பட்டவன் யாரானாலும் அவருடன் இறுதிவரை அவருக்காக போராடத் தயங்கியதில்லை.

ஆஹ்.... சில மூடர்கள் சொல்வது போல தைமூர் ஒரு காடுமிரண்டியும் அல்ல!  நிச்சயமாக அல்ல என்று தலையாட்டினர்.. அவரின் கருத்தை ஆமோதிப்பது போல அவர் மகுடத்தில் இருந்த குஞ்சங்களும் இல்லை என்பது போல பக்கவாட்டில் ஆடின.  அவர் ஒரு கலாசாரம் மிக்கவர்.  அவரது தலை நகரான சமர்கண்டை (Samarkand) பார்... இன்றும் அது எத்தனை அழகான நகரமாக இருக்கிறது... அவர் காலத்தில் அது கலை எழில் கொஞ்சும்நகரமாக இருந்தது.. பல மேதைகள் வந்து படித்த...போதித்த நகரமாக இருந்தது....

அரசனுக்கு வாழ்வதற்கு சில விதி முறைகள் உண்டு பாபர்... சாதாரண மனிதனுக்கு இல்லாத விதிகள்.. சாதா மனிதனின் தவறுகள் அவனை மற்றும் அவனை சார்ந்தவர்களை மட்டும் தான் பாதிக்கும்.  அரசனின் தவறுகள் ஒரு நாட்டையே பாதிக்கும், ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும்.  தைமூர் ஒருபொழுதும் அரசனுக்குரிய அந்த விதிகளை மீறியதில்லை.  வெற்றிக்கும் தனக்கும் இடையில் வந்த எதற்கும் அவர் கருணை காட்டியதில்லை.  இதைப்புரிந்து செயல்பட்டவர்களே அவரோடு இருந்தார்கள்.  புரியாதவர்கள் மாண்டு போனார்கள்...

அங்கே சில வினாடிகள் நிசப்தம் நிலவியது. மிர்சா ஷேக் தன் கண்களை மூடிக்கொண்டு அந்த பொன்னான நாட்களை தன் விழித்திரையில் கொண்டு வந்தார்.  பெருமை பொங்கி வர அவை வியர்வைத் துளிகளாய் அவரது நெற்றியில் அரும்பியது.

பாபரும் அவரது பெருமையில் பங்கு கொண்டான்.  கண்ணை மூடிக்கொண்டு நின்றிருந்த அப்பாவை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான்.  அவனும் கண்ணை மூடிக்கொண்டு அவர் விழித்திரையில் விழுந்த காட்சிகளில் அவரோடு பங்கு கொண்டான்.  தினம் சொல்லும் கதை இத்தோடு முடிந்து விடும்.  ஆனால் இன்று அப்படி இல்லை....

மிர்சா ஷேக்கின் முகம் மாறியது.  கவலை ரேகைகள் அவரது முகத்தில் கோடு போட்டன. அவனது அணைப்பை விடுவித்து அவனுடைய தோள்கள் இரண்டையும் அவனுக்கு வலிக்கும் அளவுக்கு அழுத்தமாகப் பற்றினார். மண்டியிட்டு அவன் முகத்தோடு முகம் நோக்கினார்.  சற்றும் எதிர்பாராத பாபர் ஒரு பயம் கலந்த அதிர்ச்சியோடு அவன் தந்தை முகத்தை பார்த்தான்.  சிறு பனித்துளி போல அவர் கண்களில் கண்ணீர் அரும்பியது.

இதுவரை நீ கேட்டது தைமூரின் கதை.  அவரது ரத்தம் என்று கூறிக்கொள்ளும் என் கதை என்ன? பெர்கானா என்னும் ஒரு சிறிய ராஜ்ஜியம்!  மனிதர்களை விட ஆடு மாடுகளே அதிகம் கொண்டாடும் ராஜ்ஜியம்! அடுத்து உள்ள சமர்கண்ட் (Samarkand) ராஜ்ஜியத்தை பார்.. என் அண்ணன் அரசாளுகிறான்! ஹிந்துகுஷ் (Hindukush mountains) மலையை அடுத்து அங்கே செல்வச்செழிப்பு நிறைந்த காபூல் (Kabul)  நகரைப்பார் அங்கேயும் என் ஒன்று விட்ட சகோதரன் (Cousin) ஆளுகிறான்.  இவர்களை ஒப்பிடும்போது நான் பரம ஏழை.  ஆனாலும் தைமூரின் ரத்தம்!  நாங்கள் எல்லோரும் தைமூர் ரத்தம். அவர்கள் ரத்தத்தில் தைமூரின் பெருமை எவ்வளவு ஓடுகிறதோ அது என் ரத்தத்திலும் ஓடுகிறது!

அப்பா....

பாபரின் குரலை செவிமடுத்து தொடர்ந்தார்... தைமூரின் பரம்பரை என்று மார் தட்டிக்கொள்ளும் எங்களை எல்லோரையும் பார்... உலகத்தை தன் குடைக்கு கீழே கொண்டு வர நினைத்த தைமூர் எங்கே? நாங்கள் எங்கே? ஏதோ இனத்தலைவர்கள் போல எங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றோம்.  இன்று தைமூர் உயிரோடு வந்தால் எங்களை நோக்கி காரி உமிழ மாட்டார்? பல தேசங்களின் அரசர்கள் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்ட தைமூரின் வாரிசுகள் இப்படி ஆளுக்கொரு பக்கம் பிரிந்து நிற்பதைக் கண்டால் எங்களை மன்னிப்பாரா? இல்லை அவர் மனிப்புக்குத்தான் நாங்கள் தகுதியானவர்களாக இருக்கின்றோமா?

மிர்சா ஷேக் தனது உறுதியான பிடியை பாபரின் தோளிலிருந்து தளர்த்தவில்லை.  பாபர்....உனக்கு புரிந்துகொள்ளும் வயதாகிவிட்டது.  என் காலத்திற்கு பிறகு என் ஒரே வாரிசான நீ, நாடாள வந்தால் தைமூரைப்போல் உலகாள வேண்டும்.  நம் முன்னோருக்கும் தைமூருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம்.  உலகை கைப்பற்றி ஆள்வதன் மூலமே அந்தக் கடனை நான் திரும்ப செலுத்த முடியும். 

மறவாதே மகனே.. “தைமூரின் ரத்தம் உன் ரத்தம். உன் ரத்தம்...” கவலைக்கோடுகள் மறைந்து கண்ணீர் கோடுகள் மட்டுமே இருந்த அவரது முகத்தில் ஒரு ஆவேசம் இருந்தது. “தைமூரின் ரத்தம் உன் ரத்தம்..” மீண்டும் சொன்னார்.

பாபரும் உதட்டசைவில் சொன்னான்.. ““தைமூரின் ரத்தம் என் ரத்தம்..”
 

No comments:

Post a Comment