ஓ.. என் காதலியே!
நாம் இருவரும்
ஒருவரை ஒருவர்
காதலிக்கின்றோம்..
ஆம் கண்ணே..!
இன்றோ நேற்றோ அல்ல..
யுகம் யுகங்களாய்..
காலத்தை கடந்து நிற்கும்
ஆலமரம் போல்
வேரூன்றி நின்றோம்..
தேசத்தின் எல்லை தாண்டி ...
நேசம் கொண்டோம் நாம்..
உடல் வாசம் தீர்ந்த உடன்
தொடல் மறக்கும் காதலல்ல..
மெயின்பம் தீர்ந்தவுடன்
பைதூக்கும் காதலல்ல...
ஆன்மாக்கள் ஒன்றை ஒன்று
நேசிக்கின்ற காதல்... அன்பால்
பூசிக்கின்ற காதல்..
காலம் மாறலாம்..
காட்சி மாறலாம்..
தீயால்
தீய்த்து இவ்வுடலை
மாய்த்து விடலாம்..
மண்ணுக்கு உணவென்று
ஓர் நாள் கழியலாம்..
நம் உடல் அழியலாம்..
ஆன்மாக்கள் அழிவதில்லை..
கண்மணி!!
அன்று...
என் பெயர் அம்பிகாபதி..
உன் பெயர் அமராவதி..
கவிதை பாடி காலமெலாம்
களிப்புற கனவு கண்டோம்..
புவி வேந்தனுக்கு இணையாக
கவி வேந்தன் இல்லை...
புலவர்க்கு மரியாதை
அவை அளவே..
சமூகத்தின் சட்டத்தை
புரிந்து கொள்ளாத நாம்
காதலித்தோம்..
இன்பத்தின் எல்லை
இதுதான் என்று
மனக்கணக்கு போட்டோம்..
நம் வாழ்வுக்கு எல்லை
இதுவென்று
சாவு நமக்கு
தினக்கணக்கு போட்டது..
பாக்கணக்கில்
செய்த சதியால்
நம் கணக்கு
அன்றோடு முடிந்தது..
ஆயினும் என்ன..?
உடல் அழியலாம்..
ஆன்மாக்கள் அழிவதில்லை..
பிறிதொரு காலம்
வேறோர் உயிரில் பிறந்தோம்
வேறோர் பெயரில் பிறந்தோம்..
என் பெயர் ரோமியோ
உன் பெயர் ஜூலியட்
மேல்மாடம் வழியேறி
வந்துன்னை சந்தித்தேன்..
செம்பருத்தி பூப்போல
செங்கந்தாள் விரல் கொண்டு
இன்கொருத்தி வந்தாள் என
பூக்களெலாம் உனைக்கண்டன
பொறாமை கொண்டன..
உன்
நீல விழி கண்டு
கோலமிகு விண்மீனும்
நம்மைப்பார்த்து
கண்ணசைத்தது..
மண்ணுக்கு வரச்சொல்லி
மடல் அனுப்பினோம்..
அவையோ நம்மை..
விண்ணுக்கு வரச்சொல்லி
விலாசம் தந்தன..
இம்முறை நம்மைப் பிரித்தது
குடும்ப்பப்பகை..
நீ இறந்ததாய்யென நான் இறக்க
நான் இறந்தேன் என நீ இறக்க
உன் நெஞ்சில் பாய்ந்த கத்தி
என் உயிரை பறித்தது அறிவாயா
கண்மணி..?
நாம் இறந்தோம்..
ஆன்மாக்கள் அழிவதில்லை..
மீண்டும் ஓர்முறை
தோன்றினோம்...
ஆடுகின்ற ஆரணங்கு
அழகு பார்க்க மட்டுமே என்றனர்...
பூக்களுக்கு மணம் உண்டென்று
பிரித்தறியும் பேதையர்கள்
பூக்களுக்கும் மனம் உண்டென்று
அறியாதார்!
அக்பருக்கு மகனாய்
சலீம் என்று
பிறந்து விட்டதால்
அனார்கலி உன்னை
மனம் சொன்ன
விலை கொடுத்து
வாங்க தடை சொல்ல வில்லை...
உன்னை வாங்க
என் மனமே விலை என்று
அறியாதார் மாந்தர்கள்...
பேறுபெற்ற பாதுஷா
ஆனால் என்ன..
அக்பரும் ‘அப்பா’ தானே ?
இல்லற வாழ்வென்றால்
நீ மட்டுமேஎன்று சொன்னதால்
"கூடி நிற்கும் கூட்டத்தில்
ஆடி காட்டும் நங்கையா
நாடாளும் மன்னனின்
வீடாளுவதா?" என
உன்னை உயிரோடு
கல்லறைக்கே அனுப்பினார்கள்
கயவர்கள்..
சுவரெழுப்பி நமை பிரித்தவர்க்கு
என்ன புரியும் ?
ஆன்மாக்கள் அழிவதில்லை..
இன்று
நீ நீயாகவும்
நான் நானாகவும்
பிறந்த்துள்ளோம்...
கதை வேறு
காலம் வேறு
மனிதர்கள் வேறு
களம் ஒன்று தான்..
நமை பிரித்த
மனிதர்களின்
உளம் ஒன்று தான்..
எதை கூறி நமை
பிரித்தார்களோ
இன்றும் அதே
கதை கூறி
நம்மை பிரிக்கின்றார்கள்!
பணம் இருந்தால்
மணம் என்று சிலர்
கணக்கு போடுகிறார்கள்...
ஜாதி என்றும்,
மதம் என்றும்
கோடு போட்டு
அன்புக்கும் உண்டு
அளவு கோல் என்கிறார்கள்..
உன் தாயென்ன?
தந்தையென்ன?
தேடிப்பார்த்து தேடிப்பார்த்து
சுவர் எழுப்ப கூடி நிற்கிறார்கள்...
இம்முறை நாம்
தோற்கக்கூடாது!
இத்தனை யுகம்
பிரிந்தது நின்ற நாம்
தெரிந்தே
இறந்து விடக்கூடாது!
தடைகள் வந்தால்
உடைத்தெறிவோம்!
சிறுமதி படைத்த
இந்த சமூகத்தின்
அவலங்களைப்
பார்த்து சிரிப்போம்!
அதன் வாதங்களை
நம் காதல் தீயில்
போட்டு எரிப்போம்..!
அப்படியும் சாவு
நம்மை சந்தித்தால்...
இம்முறையும்
மனிதர் சட்டம்
நம்மை பிரித்தால்..
மீண்டுமோர்முறை
பிறவாமலே இருப்போம்
அது தான் நல்லது !